Ads (728x90)

இந்திய மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிய ஒரு விளைவாக இந்தக் கன்னி கழிதல், கன்னித் திரை தொடர்பான நம்பிக்கைகள் இன்றும் அதிகமான ஊர்களில் நடை முறையில் அல்லது வழக்கத்தில் உள்ளன. திருமணத்திற்கு முந்தைய உடலுறவு தான் இதற்கான காரணம் என்றும், திருமணத்திற்கு முந்திய உடலுறவில் ஈடுபட்டவளை, நான் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும் எனும் கேள்விகளும், ஆணாதிக்கம் எனும் அடக்கு முறையின் வெளிப்பாடாய் எமது சமூகங்களில் இன்றும் காணப்படுகின்றன.

ஒரு சில இடங்களில் இன்னமும் பெண் கன்னி கழியாமல் இருக்கிறாள் என்பதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் கொடுத்தே திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் குஜராத், மற்றும் பஞ்சாப் முதலிய மாநிலங்களில் திருமணத்தின் பின் இடம் பெறும் முதலிரவின் போது மணமகன், மணமகள் முதலியோரைத் தனியறையில் விட்டு, கட்டிலில் வெள்ளைத் துணியை விரித்து விடுவார்கள்.

மறு நாள் காலை கட்டிலில் இரத்தம் இருந்தால் தான் பெண் கன்னி கழியாமல் இருக்கிறாள் எனும் நம்பிக்கையில் திருமணத்தின் முக்கிய அம்சமான மாமியார் வீட்டவர்களின் வரவேற்பு, உபசாரம் இடம் பெறும், இல்லை என்றால் எல்லோரும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு விஜய் படம் பார்த்த ரசிகர்கள் போல சோகத்துடன் தான் இருப்பார்கள். இதனை ஒரு பெரிய பண்டிகை போன்று மணமகளைப் பல்லக்கில் ஏற்றி வீதியுலாவாக அழைத்து வந்து கொண்டாடி மகிழ்வார்கள். இதே நிலமை எமது இலங்கையில் உள்ள சகோதர இனத்தவர்களான சிங்களவர்களிடமும் இன்று வரை நடை முறையில் இருக்கிறது. இஸ்லாமிய உறவுகளிடமும் இந்தப் பண்பாடு இன்றும், காணப்படுகின்றது

ஆசியாவிலுள்ள ஏனைய இன மக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழர்களிடம் இப்படியொரு பண்பு இல்லை என்றே கூறலாம். கன்னித் திரை தொடர்பான டெஸ்ட்டிங்கில் தமிழர்கள் ஈடுபடுவதில்லை என்பது உண்மை, எங்காவது கிராமப் புறங்களில், இவ் நிகழ்வுகள் இன்றும் நடை முறையில் இருக்கலாம், ஆனால் தமிழர்களிடமும், தமிழ் ஆண்களிடமும் உள்ள மிக, மிக கெட்ட பழக்கம் என்ன தெரியுமா?சந்தேகப்படுவது.

உடலுறவின் போது இரத்தம் வரவில்லை என்றால் திருமணத்திற்கு முன்னரான உடலுறவு தான் இதற்கான காரணம் என்றும், அப் பெண் தவாறன நடத்தை உடையவள்; ஏற்கனவே கெட்டுப் போய் விட்டாள் எனும் வகையில் உளவியல் ரீதியில் குழப்பமடைந்து கற்பனைகளில் மூழ்கி, பெண்ணை வார்த்தைகளால் துன்புறுத்திச் சாகடிப்பது எமது சமூகத்தில் நடக்கும் ஒரு விபரீத நிகழ்வாகி விட்டது இன்று.


ஒரு பெண் பூப்படைந்த காலப் பகுதியின் பின்னர், அவள் சைக்கிள் ஓடுவதால், விளையாட்டுக்களில் பங்கு பற்றுவதால், அல்லது நடனமாடுவதால் கன்னித் திரை கிளிவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் எத்தனையோ இடங்களில் இதனை நம்ப மறுத்தவர்களாய், ’நீ ஏற்கனவே கை பட்ட சீடி, நீ பாவிச்ச பொருள் தானே’ என்றெல்லாம் வசை மொழிகளைக் கூறி, பெண்ணைத் திட்டி, வார்த்தைகளால் கொன்று அவளின் வாழ்க்கையினைச் சீரழிக்கும் செயற்பாடுகளில் கணவன், மற்றும் மாமியார் வீட்டுக்காரர் ஈடுபடுவதாக வைத்தியர்கள் கூறுகிறார்கள்.
ஒரு ஆண் மகன் திருமணம் செய்யப் போகும் போது, சும்மா ஒரு தமாசுக்காக ‘மச்சான் உன் ஆளை அந்தப் பையன் கூட ரெண்டு வருசத்திற்கு முன்னாடி கண்டிருக்கிறேன்’ என்று சொன்னாலே போதும், நெருப்பு தானாகவே பற்றிக் கொள்ளும். பெண்ணின் வாழ்க்கையில் அன்று முதல் ஏழரை உச்சத்தில் ஏறி உட்கார்ந்து கொள்ளும்.

இன்றைய கால கட்டத்தில் ஒரு ஆண் மகன், வெளி நாட்டில் ஏற்கனவே திருமணமாகி, விவகாரத்துப் பெற்று இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் பெண் மட்டும் முதற் தாரமாக அந்த மணமகனை மணம் முடிக்க வேண்டும் எனும் நிலமை தற்போது காணப்படுகிறது, இங்கேயும் பார்த்தால், ஆண் ஏற்கனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவனாக இருந்தாலும், பெண் மட்டும் மணமாகாதாவளாக இருக்க வேண்டும் எனும் தனி மனித ஆதிக்க உணர்வுகளே முதன்மைப்படுத்தப்படுகின்றன. இந்த தனிமனித ஆதிக்கச் சிந்தனைகள எமது சமூகத்தில் இருந்து இலகுவில் அகற்ற முடியுமா?


உடலுறவின் பின்னர் இரத்தம் வரவில்லை என்பதால் அப் பெண் தவறானவள் எனும் கண்ணோட்டத்தில் எமது சமூகம் ஏன் பார்க்கின்றது? பெண்களின் கன்னித் திரை கிழியாமல் இருந்தாலும், உடலுறவின் போது சிலருக்கு இரத்தம் வராது என்று விஞ்ஞானம் கூறுகின்றது. ஆனால் எமது சமூகத்தில் ஏன் கன்னித் திரையின் அடையாளமாக இரத்தம் வர வேண்டும் என நம்புகிறார்கள்?
ஆண்களின் பார்வையில், அவர்கள் சமூகத்தில் திருமணத்திற்கு முன்னர் எவ்வகையான உறவுகளை வைத்திருந்தாலும் அவற்றை உடலியல் ரீதியாக நிரூபிக்க முடியாது, ஆனால் பெண்களை மட்டும் ஆண்கள் ஏன் பிறிதோர் கண்ணோட்டத்தில் இவள் கெட்டுப் போனவள் எனும் நோக்கோடு பார்க்க வேண்டும்? இயற்கையான காரணிகளை விடுத்து, பெண்ணின் உடலியல் ரீதியான செயற்பாடுகள் தான், அவளின் கன்னித் திரை கிழிவிற்கு காரணம் எனும் நம்பிக்கையில் பெண்களைத் துன்புறுத்தும் ஆண்களை மாற்ற ஏதாவது வழி முறைகள் இருக்கின்றனவா? தெரிந்தால் கூறுங்கள்.
எமது கலாச்சாரத்தில் காணப்படும், கன்னித் திரை தொடர்பான தெளிவில்லாத நம்பிக்கைகளின் பின்னணி என்ன? இதற்கான காரணம் என்ன? ஆண்கள் மட்டும் திருமணத்திற்கு முன்னர் மனதால் ஒரு பெண்ணைக் கூட நினைப்பதில்லையா? ஒரு பெண் பாலியல் உறவின் மூலம் தான் தன் கன்னித் திரையினை இழந்திருக்கிறாள் என்று எமது சமூகத்தவர்கள் மட்டும் ஏன் திடமாக நம்புகிறார்கள்? இந்த தெளிவற்ற நம்பிக்கைகளை சரியான கண்ணோட்டத்தில் அணுகி, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது சாத்தியமா? ஒரு பெண்ணின் கற்பு என்பதன் அடையாளமாய் கன்னித் திரையினை எம்மவர்கள் கருதுவது சரியா?

Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment